×

வேப்பந்தட்டை அருகே கற்கள் பெயர்ந்து சேதமடைந்த கிருஷ்ணாபுரம்-அன்னமங்கலம் சாலை தனியார் பஸ்கள் வழித்தடம் மாறிச்செல்லும் அவலம்

பெரம்பலூர், பிப்.27: வாகனங்களை  கீழே சாய்த்து திணறடிக்கும் கிருஷ்ணாபுரம்-அன்னமங்கலம் சாலை.  தரமற்ற இந்த சாலையால் ஏற்கனவே வந்து சென்ற  தனியார் பஸ்கள் வழித்தடம் மாறிச்செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. பெரம்பலூர்  மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, அன்னமங்கலம் ஊராட்சிக்கு பெரம்பலூர்  ஆத்தூர் சாலையில் எசனை, வேப்பந்தட்டை இடையே தார்சாலை இருப்பதுபோல்,  கிருஷ்ணாபுரம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கிற்கு எதிரேயிருந்து தனியாக சாலை வசதியும் உள்ளது. வட்டார மருத்துவமனை,  வருவாய் ஆய்வாளர் அலுவலகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்கு  வசதிகளைக் கொண்ட கிருஷ்ணாபுரத்திற்கு அன்னமங்கலம் ஊராட்சி மக்கள் இந்த  சாலை வசதியைத்தான் பெரிதும் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்தச் சாலை தரமாக  இருந்தவரைக்கும், ஆத்தூரிலிருந்து பெரம்பலூர் வரும் தனியார் பஸ்  கிருஷ்ணாபுரம், அன்னமங்கலம் வழியாக பெரம்பலூருக்கு இயக்கப்பட்டு வந்தது. இந்த சாலை பல ஆண்டுகளாக புதுப்பிக்கப்படாமல், குண்டும், குழியுமாகி தற்போது பஸ் போக்குவரத்து வசதியின்றி சிதிலமடைந்து கிடப்பதால் காலை 7 மணிக்கு  அன்னமங்கலம் வந்து செல்லும் தனியார் பஸ் தனது வழித்தடத்தை வேப்பந்தட்டை  வழியாக மாற்றிக்கொண்டது.

அன்னமங்கலம், அரசலூர், விசுவக்குடி, முகமதுபட்டிணம் கிராமத்தினர் தங்கள் பகுதிகளில் விளைந்த வேளாண் பொருட்களை சந்தைப்படுத்த, கிருஷ்ணாபுரம், ஆத்தூர், சேலம் கொண்டு செல்லவும்  இந்த வழித்தடத்தைத்தான் பெரிதும் பயன்படுத்துகின்றனர். ஆனால்,  தற்போது டிராக்டர், மினி வேன்கள் செல்வதற்குக்கூட லாயக்கற்ற நிலையில் இந்த  சாலைமாறிவிட்டது. சுமார் 5 கி.மீ. நீளமுள்ள இந்த சாலையை புனரமைத்து  புதிய தார்சாலையாக மாற்றித்தர வேப்பந்தட்டை ஒன்றிய நிர்வாகம் முன்வர  வேண்டும். இதற்கு பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் பரிந்துரைக்க வேண்டும் என  அப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள், வணிகர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags : Krishnapuram-Annamangalam Road Private ,
× RELATED பெரம்பலூர் தொழில்நெறி வழிகாட்டு...